பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மாணவர்கள் பீதி


பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மாணவர்கள் பீதி
x

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர். எச்சரிக்கையாக இருக்கும்படி மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பல்கலைக்கழகத்தில் சிறுத்தை

பெங்களூரு ஞானபாரதியில் பெங்களூரு பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள என்.எஸ்.எஸ். பவன் அருகே சிலர் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு சிறுத்தை அந்த பகுதியில் சுற்றி திரிவதை பார்த்து நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக பல்லைக்கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

என்.எஸ்.எஸ். பவனுக்கு பின்புறம் 100 ஏக்கர் பரப்பளவில் காடு போன்று மரங்கள் வளர்ந்து உள்ளது. இதனால் அங்கிருந்து சிறுத்தை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் பற்றி வனத்துறையினருக்கு, பல்கலைக்கழகத்தில் இருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

இதன் காரணமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டாலும், இதுவரை வனத்துறையினர் யாரும் வந்து தேடும் பணியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் சமீபத்தில் கெங்கேரி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அந்த சிறுத்தையே ஞானபாரதி வனப்பகுதிக்கு வந்து, பல்கலைக்கழக பகுதியில் சுற்றி திரியலாம் என்று கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், தேவையில்லாமல் இரவில் சுற்றி திரிய வேண்டாம் என்றும் பல்லைக்கழகம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

என்.எஸ்.எஸ். பவன் அருகே தினமும் மாணவர்கள் வலம் வருவார்கள். நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சியில் ஈடுபடுவதும் உண்டு. இதனால் மாணவர்கள் மற்றும் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story