பெலகாவியில் பசவராஜ்பொம்மை- சித்தராமையா திடீர் சந்திப்பு


பெலகாவியில் பசவராஜ்பொம்மை- சித்தராமையா திடீர் சந்திப்பு
x

பெலகாவியில் பசவராஜ் பொம்மை-சித்தராமையா ஆகியோர் திடீரென்று நேரில் சந்தித்து கைகுலுக்கி சிரித்து பேசி கொண்டனர்.

பெலகாவி:-

கர்நாடக அரசியலில் இரு எதிர் துருவங்களாக உள்ள முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையும், கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் களத்தில் அனலை தெறிக்கவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட லிங்காயத் முதல்-மந்திரி ஊழல் செய்து வருகிறார் என பசவராஜ்பொம்மையை சித்தராமையா தாக்கி பேசினார். அதற்கு நான் ஊழல் செய்ததை சித்தராமையா நிரூபிக்கப்படும் என பசவராஜ்பொம்மை சவால் விடுத்தார்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று பெங்களூருவில் இருந்து விமானத்தில் பெலகாவி சாம்ரா விமான நிலையத்திற்கு சென்றார். அதே சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மறைந்த முன்னாள் மந்திரி டி.எம்.இனாம்தார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு பெங்களூருவுக்கு செல்ல அதே விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது பசவராஜ்பொம்மையும், சித்தராமையாவும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் கைகளை குலுக்கி சிரித்து பேசிக்கொண்டனர். மேலும் பசவராஜ்பொம்மை தோளில் சித்தராமையா நட்பாக தட்டிக்கொடுத்தார். அதற்கு பசவராஜ்பொம்மை சித்தராமையா முதுகில் கை வைத்து அருகில் சென்று பேசியப்படி இருந்தார். பின்னர் இருவரும் மீண்டும் கைகுலுக்கிக்கொண்டு பிரியா விடை பெற்றனர்.

அரசியலில் இது எல்லாம் சாதாரணமப்பா என்கிறீர்களா....

சிறிது நேரத்தில் பெலகாவி விமானத்தில் வைத்து சித்தராமையா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்து தேர்தல் தொடர்பாக பேசினார்.


Next Story