விஷம் குடித்து 2 இளம்பெண்கள் தற்கொலை


மங்களூருவில் விஷம் குடித்து 2 இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு:

மங்களூருவில் விஷம் குடித்து 2 இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண்கள்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா போலீஸ் எல்லைக்குட்பட்ட பத்ரமே கிராமத்தை சேர்ந்த பட்டரு பாபு என்பவரின் மகள் ரக்ஷிதா (வயது 22), சீனிவாச ஆச்சார்யா என்பவரின் மகள் லாவண்யா (21). இவர்கள் இருவரும் ஊரக வளர்ச்சி திட்டத்தின் சேவை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுவதாக உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குடும்பத்தினர் நெல்லியாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்கொலை

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரக்ஷிதாவும், லாவண்யாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தர்மஸ்தலா போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ரக்ஷிதா விஷம் குடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் லாவண்யா விஷம் குடித்தாரா என்பது உறுதியாகவில்லை. ஆனாலும் அவர்கள் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

ரக்ஷிதாவும், லாவண்யாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் 2 பேரும் சேர்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்தனர் என்பது குறித்து தர்மஸ்தலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story