துமகூருவில், சிறையில் கைதிகளுக்கு பொருட்களை வழங்க லஞ்சம் வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு கைது


துமகூருவில், சிறையில் கைதிகளுக்கு பொருட்களை வழங்க லஞ்சம் வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு கைது
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் லஞ்சம் வாங்கிய சிறை போலீஸ் சூப்பிரண்டு, லோக் அயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:-

சிறையில் லஞ்சம்

துமகூரு மாவட்டம் மதுகிரியில் உள்ள சிறையில் ஏராளமான விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தேவேந்திர கோனி என்பவர் சிறை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். கைதிகளை காண வரும் உறவினர்களிடம் குறிப்பிட்ட தொகையை அவர் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.

அதாவது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வேண்டிய பொருட்களை கொடுக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக லோக் அயுக்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் லோக் அயுக்தா போலீசார், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பெங்களூருவில்...

இதேபோல் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியை சேர்ந்தவர் சத்யப்பா காமா. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியராப இவர் தனது ஓய்வூதிய தொகையை விடுவிக்க கோரி, வட்டார கல்வித்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வெங்கடேஷ் என்பவரை சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்போது அவர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், ஓய்வூதியம் பெறுவதற்கு உதவுவதாக கூறினார். இதுபற்றி அவர் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் லஞ்சம் பெறும்போது வெங்கடேசை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் என்ஜினீயராக இருப்பவர் சிவண்ணா. இவர் நிலுவையில் உள்ள ஒப்பந்த தொகையை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து காண்டிராக்டர் ஒருவர் லோக் அயுக்தாவில் புகார் அளித்தார். அவர்கள் கூறி அறிவுரையின்படி, என்ஜினீயரை சந்தித்து காண்டிராக்டர் பணம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் என்ஜினீயரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அந்தந்த பகுதி லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story