பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணிக்கு ஆதரவு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணிக்கு ஆதரவு என ஜி.டி.தேவேகவுடா எம்.எல்,ஏ. கூறினார்.
மைசூரு
பா.ஜனதாவுடன் கூட்டணி
மைசூருவில் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி.தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனதா தளம் (எஸ்) கட்சி 19 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.
அதில், பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம்.
மேலும் கூட்டணி தொடர்பாக மாநாடு ஒன்றை நடத்தி அதில் ஜனதா தளம் (எஸ்) கட்சி முக்கிய பிரமுகர்களுடன் மீண்டும் கருத்துகள் கேட்கப்படும்.
பா.ஜ.க.வுடன் இணைந்து
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரவாத திட்டத்திற்காக வாக்களித்த மக்கள் தற்போது எதற்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தோம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு தெரிவித்த அதிகாரிகளை காங்கிரஸ் அரசு இடமாற்றம் செய்து வருகிறது.
ராமநகரில் போராட்டம் நடத்திய ஜனதா தளம் (எஸ்) கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் சேருவதில்லை. பா.ஜ.க.வுடன் நாங்கள் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.