கவர்னருக்கு எதிரான தெலுங்கானா அரசின் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு
கவர்னருக்கு எதிரான தெலுங்கானா அரசின் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைத்தது.
தெலுங்கானா மாநில தலைமைச்செயலாளர் ஏ.சாந்திகுமார் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தெலுங்கானா சட்டப்பேரவையில் தெலுங்கானா முனிசிபல் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, கடந்த 2022 செப்டம்பர் 14-ந்தேதி முதல் நிலுவையில் இருந்துவருகின்றன.
அந்த மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 20-ந்தேதி விசாரித்தது. அப்போது, ரிட் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் மனுவை மத்திய அரசிடம் வழங்க உத்தரவிட்டு விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், இவ்விவகாரம் குறித்து கவர்னரிடம் ஆலோசித்துள்ளேன். விசாரணையை ஏப்ரல் 10-ந்தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என வாதிட்டார்.
அந்த கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் கவர்னருக்கு எதிரான தெலுங்கானா அரசின் ரிட் மனு விசாரணையை ஏப்ரல் 10-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.