ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு...!


ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு...!
x
தினத்தந்தி 13 Oct 2022 11:19 AM IST (Updated: 13 Oct 2022 11:25 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர்.

புதுடெல்லி,

கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் நடைபெற்றது.

கர்நாடக அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாரகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். குறிப்பாக, ''உடுப்பியில் உள்ள கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்ற முடிவை எடுத்தது.

இந்த சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர். மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன. ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே ஆகும்'' என்று வாதிட்டார். அதேபோல், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த மாதம் 22-ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கவனம் பெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கி அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

அதன்படி, நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று நீதிபதி சுதான்சு துலியா, ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கின் உரிய நடவடிக்கைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இந்த மறுபட்ட தீர்ப்பின் காரணமாக இந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

1 More update

Next Story