சண்டிகார் மேயர் தேர்தல் முறைகேடு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


சண்டிகார் மேயர் தேர்தல் முறைகேடு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 19 Feb 2024 11:34 AM GMT (Updated: 19 Feb 2024 12:14 PM GMT)

சண்டிகார் மேயர் தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

சண்டிகார் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை இந்தியா கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. பா.ஜ.க.வும் வேட்பாளரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்டார். இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டார்.

இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன. அதனால் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக பஞ்சாப்- அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பா.ஜ.க வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடையும் கோரியது ஆம் ஆத்மி. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார். கடந்த 5-ம் தேதி ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சண்டிகார் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை நாளை பிற்பகலுக்குள் சமர்ப்பிக்கவும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை சமர்ப்பிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், சண்டிகாரில் நடைபெறும் குதிரை பேரம் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். சண்டிகாரில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை" என்று உத்தரவிட்டுள்ளது.


Next Story