முதல்-மந்திரி ஆகும் சித்தராமையாவை பற்றிய ஆச்சரியம் கலந்த உண்மைகள்...
கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி ஆகும் சித்தராமையா பற்றி பல ஆச்சரியம் கலந்த உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
பெங்களூரு,
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. அடுத்த முதல்-மந்திரி ஆக சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ முறையில் இன்று அறிவித்து உள்ளது. துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமார் செயல்படுவார்.
75 வயது ஆகும் சித்தராமையா, இதற்கு முன்பு கர்நாடக முதல்-மந்திரியாக பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர். முழு பதவி காலமும் வகித்த அவர், அதன்பின் 2-வது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளார்.
இதற்கு முன்பு தேவராஜ் உர்ஸ் (1972-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை) 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்து உள்ளார். எனினும், 2-வது முறையின்போது தேவராஜின் ஆட்சி 2 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீடித்தது.
அவரது முதல் பதவி காலத்தின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.
இதனால், 2 முறை கர்நாடகாவில் முதல்-மந்திரியாகும் வரிசையில் தேவராஜ் உர்சுக்கு அடுத்து 2-வது முறை பதவி வகிக்கும் பெருமையை சித்தராமையா பெறுகிறார்.
எனினும், முதல்-மந்திரியாக சித்தராமையா முதல் முறை முழு பதவி காலம் வகித்தபோதும், 2-வது முறை தேர்தலில் தோல்வி கண்டார். அதன்பின் மீண்டும் முதல்-மந்திரியாகி உள்ளார். ஆனால், உர்ஸ் முதல்-மந்திரியாக இருந்தபோதே 2-வது முறையும் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இதேபோன்று, ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக பதவி வகித்தபோதே 2-வது முறையும் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் முதல்-முறை (1983-85) பதவி வகித்த பின்னர், 2-வது முறையாக 1985 முதல் 1988 வரை முதல்-மந்திரியாக இருந்துள்ளார்.
சித்தராமையா அவரது பதவி காலம் முழுவதும் முதல்-மந்திரியாக பதவியில் நீடித்தால், 2 முறை முழு காலஅளவும் பதவி வகித்தவர் என்ற பெருமையுடன் வரலாறில் இடம் பெறுவார்.
கர்நாடகாவில், 4 முறை முதல்-மந்திரியாக பதவியில் இருந்த பா.ஜ.க.வை சேர்ந்த எடியூரப்பா ஒரு முறை கூட முழு பதவி காலமும் முதல்-மந்திரியாக அதிகாரத்தில் இருக்கவில்லை.
2006-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா, வேறு கட்சியில் இருந்து வந்து காங்கிரசில் 5 ஆண்டு என்ற முழு கால அளவும் பதவியில் அமர்ந்தவர் என்ற பெருமையை பெற்றவர்.