பெண்களை நரபலி கொடுத்து உடல் துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி - பகீர் சம்பவம்


பெண்களை நரபலி கொடுத்து உடல் துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி - பகீர் சம்பவம்
x

கடந்த ஜூன் மாதம் 50 வயது மதிக்கத்தக்க பெண் மாயமானார்.

திருவனந்தபுரம்,

பணக்காரராக வாழ ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடவந்தரா பகுதியை சேர்ந்த 50 வயதான பெண் லாட்டரி சீட்டு விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த சில செப்டம்பர் மாதம் மாயமானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்டம் திருவாழா பகுதியை சேர்ந்த பக்வந்த் சிங் மற்றும் அவரது மனைவி லைலா மற்றும் முகமது ஷபி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. செப்டம்பர் மாதம் மாயமான பெண்ணை நரபலி கொடுத்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணை போல் மற்றொரு பெண்ணையும் ஜூன் மாதம் நரபலி கொடுத்ததாக தெரிவித்தனர். இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்வந்த் சிங் திருவாழா பகுதியில் மசாஜ் சிகிச்சையாளராக உள்ளார். இவரது மனைவி லைலா. பணக்காரராக வாழ ஆசைப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதிக்கு முகமது ஷபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நரபலி கொடுத்தால் பணக்காரர்களாக வாழலாம் என தம்பதியை முகமது ஷபி மூளைச்சலவை செய்துள்ளார். இதை நம்பிய தம்பதி, இதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி முகமதுவிடம் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கடவந்தரா பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பக்வந்த் வீட்டிற்கு முகமது அழைத்துவந்துள்ளார். அங்கு பக்வந்த் அவரது மனைவி லைலா மற்றும் முகமது ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை நரபலி கொடுத்துள்ளனர்.

பெண்ணின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தபின் உடலை துண்டு துண்டாக வெட்டி திருவாழா பகுதியில் ஆள்நடமாட்டமற்ற இடத்தில் புதைத்துள்ளனர்.

ஜூலை மாதம் நரபலி கொடுத்த நிலையில் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதமும் மற்றொரு பெண்ணை நரபலி கொடுத்துள்ளனர்.

50 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணும் லாட்டரி சீட்டு விற்கும் தொழில் செய்துவந்துள்ளார். அவரையும் அதேபோல், அந்த பெண்ணையும் பக்வந்த் வீட்டிற்கு முகமது அழைத்துவந்துள்ளார். அங்கு பக்வந்த் அவரது மனைவி லைலா மற்றும் முகமது ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை நரபலி கொடுத்துள்ளனர்.

நரபலி கொடுத்த பின் அந்த பெண்ணின் உடலையும் துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் மற்றொரு இடத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் புதைத்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பக்வந்த்சிங் அவரது மனைவி லைலா மற்றும் நரபலிக்கு உதவியாக இருந்த முகமது ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், நரபலி கொடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர்.

பணக்காரராக வாழ ஆசைப்பட்டு 2 பெண்களை நரபலி கொடுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story