நில முறைகேடு விசாரணையில் அலட்சியம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


நில முறைகேடு விசாரணையில் அலட்சியம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:46 PM GMT)

நில முறைகேடு விசாரணையில் அலட்சியமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா மேடஹள்ளி பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக விற்றதாக நிறுவனம் சார்பில் ஹெப்பகோடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் ஏஜெண்டு சந்திரமோகன், பிரித்வீன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விசாரணையின்போது போலீஸ் இன்ஸ்பெக்டரான கிஷோர் குமார், அலட்சியமாக இருந்ததாகவும், இந்த முறைகேட்டில் அவரது சகோதரருக்கு தொடர்பு இருப்பதால் அவர் முறையான விசாரணை நடத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிஷோர் குமாரை பணி இடைநீக்கம் செய்து உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story