நள்ளிரவில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த 9ஆம் வகுப்பு மாணவன்; உணவு டெலிவரி செய்யும் ஊழியர் மீது கார் மோதி ஊழியர் பலி!


நள்ளிரவில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த 9ஆம் வகுப்பு மாணவன்; உணவு டெலிவரி செய்யும் ஊழியர் மீது கார் மோதி ஊழியர் பலி!
x

பைக்கில் சென்ற ஊழியர் மீது சிறுவன் ஒருவன் காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் பைக்கில் சென்ற உணவு டெலிவரி செய்யும் ஊழியர் மீது கோடீஸ்வரர் வீட்டு சிறுவன் ஒருவன் காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மத்திய டெல்லியின் தேஷ் பந்து குப்தா சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் 9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது வெளிநாட்டு நண்பனுடன் சேர்ந்து காரில் அதிவேகமாக வந்துள்ளான். சிறுவனும் அவனது நண்பனும் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில், ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராகுல் குமார், தனது உறவினர் பவன்குமாருடன் சேர்ந்து நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

வேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். உடனே சிறுவர்கள் இருவரும் காரை குற்றம் நடந்த இடத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் காவல்துறைக்கு பிசிஆர் அழைப்பு வந்தது. போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சையின் போது குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காரின் விவரங்களை போக்குவரத்து துறையினரிடம் சேகரித்த போலீசார், உரிமையாளரின் வீட்டிற்கு சென்று சிறுவனை கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.

9 ஆம் வகுப்பு மாணவர் எனக் கூறப்படும் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் தந்தை கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story