பள்ளி பாடத் திட்டத்தில் ராணுவ வீரர்களின் வீர தீர செயல்கள்: மாணவர்களுக்கான "வீர கதை" போட்டியில் கல்வித்துறை மந்திரி பேச்சு!
ராணுவ வீரர்கள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நோக்கில், ”வீர கதை” போட்டி நடைபெற்றது.
புதுடெல்லி,
ராணுவ வீரர்கள் நாட்டுக்காக ஆற்றிய பணிகள் மற்றும் செய்த தியாகங்கள் குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் நோக்கில், "வீர கதை" போட்டி நடைபெற்றது.
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20, 2021 வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், 4,788 பள்ளிகளைச் சேர்ந்த 8.04 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கட்டுரைகள், கவிதைகள், வரைபடங்கள் மற்றும் மல்டிமீடியா விளக்கக்காட்சிகள் மூலம் உத்வேகம் தரும் கதைகளைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்பட்டனர்.
பல சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு, 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு "சூப்பர் 25" என அறிவிக்கப்பட்டனர். வீர கதைகள் போட்டியில் வெற்றி பெற்ற 25 மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், "இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் 5 ஆயிரம் பள்ளிகளில் இருந்து 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதாகத் தெரிகிறது.
வரும் காலங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படும். மாணவர்களின் இளம் நெஞ்சங்களில் நாட்டுப்பற்றை வளர்க்கும் இந்த போட்டி இனி ஆண்டுதோறும் சேனா சூப்பர் 25 என்ற பெயரில் நடத்தப்படும்.
பள்ளிக் குழந்தைகள் எழுதியவற்றை கண்டு நான் கடந்து வருகையில், அந்த குழந்தை வட இந்தியா, தென்னிந்தியா, கிழக்கு இந்தியா அல்லது மேற்கு இந்தியா என எந்த பகுதியை சேர்ந்தவராக இருந்தாலும், அனைவரும் ஒரே தேசபக்தியால் பிணைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களின் படைப்பாற்றல் மூலம் உணர்ந்தேன்.
நாட்டுக்கான பொறுப்பை உணரவும், பொறுப்பை ஏற்கவும் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில், கடந்த 75 ஆண்டுகளில் வீர தீர செயல்களை புரிந்த ராணுவ வீரர்கள் குறித்த கதைகளை பாட புத்தகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என்றார்.