ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம்: அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 1-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம்: அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 1-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2023 9:45 PM GMT (Updated: 4 May 2023 9:45 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1-ந் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டிருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து ஜிப்சம் அகற்றவும், கசிவுநீர் பம்பிங் வேலைகளுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதித்த அவசியமான சில பராமரிப்பு வேலைகளை அரசாங்க மேற்பார்வையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந்தேதி அனுமதி அளித்துள்ளது.

இதர அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு சீர்தூக்கிப் பார்த்து தமது கருத்தை மே மாதம் 4-ந் தேதி (நேற்று) நடக்கும் அடுத்த விசாரணையில் தெரிவிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் கோரினார்.

இதற்கு வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் டேரியஸ் கம்பத்தா ஆட்சேபம் தெரிவித்ததுடன், 'நிறுவனம் தாக்கல் செய்துள்ள கூடுதல் பிரமாண பத்திரத்தை குறிப்பிட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் வேதாந்தா நிறுவனம் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. ஆலை 5 ஆண்டுகளாக இயங்காமல் 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கியபோது நேரடியாக 4 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக் கும் வேலைவாய்ப்பு வழங்கி வந்தது. ஆலையை சார்ந்த துணைத்தொழில் நிறுவனங்களில் 2 லட்சம் பேர் பயன் அடைந்து வந்தனர். ஆலையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பராமரிப்பு பணிகள் தொடர்பாக விரிவான திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் அளிக்கப்பட்டு, ஏப்ரல் 11, 13, 14, 16 ஆகிய தேதிகளில் மின் அஞ்சலும் அனுப்பப்பட்டு உள்ளது.

இது தொடர்பான கூட்டமும் ஆலையின் சார்பில் கடந்த 19, 22 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, 'அனுமதிக்கப்பட்டுள்ள ஆலை பராமரிப்பு பணிகளை சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவை கொண்டு கண்காணிக்க உத்தரவிடலாம்' என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து ஜிப்சம் அகற்றுவது, கசிவு நீர் பம்பிங் வேலைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிர்நீத்த நினைவு தினம் மே 22-ந்தேதி வருவதால், போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அவசர முடிவு எதையும் தமிழ்நாடு அரசு எடுக்க விரும்பவில்லை எனவே 4 வாரம் அவகாசம் தேவை' என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்டு மாதம் 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடைபெறும்.

மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக வேதாந்தா நிறுவனமும், தமிழ்நாடு அரசும், இதர எதிர் மனுதாரர்களும் எழுத்துப்பூர்வமான வாதங்களை ஆகஸ்டு 1-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1-ந் தேதிக்குள் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Next Story