டாடா மின்சார கார் முதன்முறையாக தீப்பிடித்தது; ஆய்வை தொடங்கிய டாடா நிறுவனம்


டாடா மின்சார கார் முதன்முறையாக தீப்பிடித்தது; ஆய்வை தொடங்கிய டாடா நிறுவனம்
x
தினத்தந்தி 23 Jun 2022 11:29 AM GMT (Updated: 23 Jun 2022 12:33 PM GMT)

டாடா நெக்சான் வகை மின்சார கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி டாடா நிறுவனம் ஆய்வை தொடங்கி உள்ளது.

புதுடெல்லி,

டாடா நிறுவனம் நெக்சான் வகை மின்சார காரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தையில் அறிமுகம் செய்தது. அவற்றில் பல கார்கள் விற்று தீர்ந்து விட்டன. இந்நிலையில், 2 ஆண்டுகளில் இல்லாத வகையில், மும்பையின் புறநகர் பகுதியில் வசாய் என்ற இடத்தில் டாடா நெக்சான் வகை மின்சார கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து உள்ளது.

கார் தீப்பிடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றிய விசாரணையை டாடா நிறுவனம் முன்பே தொடங்கி விட்டது.

இந்த கார் ஆனது, 2 மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது. காரை அதன் உரிமையாளர் சம்பவத்தின்போது, வீட்டுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது, கடும் வெப்பமோ, மழையோ அல்லது இடர் ஏற்படுத்துகிற பருவகால சூழலோ காணப்படவில்லை.

கார் உரிமையாளர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, காரில் இருந்து புகை வந்துள்ளது. அதனை கவனித்த அவர், உடனடியாக காரை நிறுத்தி உள்ளார். காரை விட்டு வெளியேறி உள்ளார். தீயணைப்பு படையினர் தகவலறிந்து உடனடியாக அந்த பகுதிக்கு வந்து வாகனத்தின் கீழ் பகுதியில் எரிந்த தீயை அணைத்தனர். தீப்பற்றி கார் எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுபற்றி முழு அளவில் தடய அறிவியல் மற்றும் பொறியியல் சார்ந்த ஆய்வை தொடர்புடைய கார் நிறுவனம் தொடங்கி உள்ளது என கூறப்படுகிறது.

2 ஆண்டுகளில் 30 ஆயிரம் டாடா நெக்சான் வகை மின்சார கார்கள் விற்றுள்ளன. கோடை மற்றும் பருவகாலங்களில் கூட இவை நன்றாக பயன்பாட்டில் இருந்துள்ளன. இந்த சூழலில், விதிவிலக்காக முதன்முறையாக கார் தீப்பிடித்து எரிந்து உள்ளது. இந்த காரை பற்றிய ஆய்வுக்கு முழு அளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் ஒத்துழைக்க காரின் உரிமையாளர் முன்பே ஒப்புதல் அளித்து விட்டார்.

கார், நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என கூறப்படுகிறது. இதன்பின் காரை புனே நகரில் உள்ள தயாரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி பொறியியலாளர்கள் குழு முழு அளவில் சோதனை நடத்தும். டாடா நிறுவன நெக்சான் வகை மின்சார காரின் பேட்டரி 8 ஆண்டுகள் உத்தரவாதம் கொண்டது என்று முன்பே அறிவிக்கப்பட்டது.


Next Story