கருணை கொலைக்கு அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த ஆசிரியை குடும்பத்தினர் - ஆந்திராவில் பரபரப்பு


கருணை கொலைக்கு அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த ஆசிரியை குடும்பத்தினர் - ஆந்திராவில் பரபரப்பு
x

ஆந்திராவில் ஆசிரியை குடும்பத்தினர் கருணை கொலைக்கு அனுமதி கேட்டு முதல்-அமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி,

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், கொரிசபாடு மண்டலம் போடுவானிபாலத்தைச் சேர்ந்தவர் சுதாராணி. இவர் அத்தங்கி மண்டலம், கோபாலபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி, தனது வீட்டுக்குச் செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வீட்டிற்கு செல்ல வழி இன்றி தவிப்பதாக கூறி கூறி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். மனு அளித்த பிறகும் பிரச்சினை தீரவில்லை.

இதையடுத்து சுதா ராணி தனது மகன், மகளுடன் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு ஒன்றை சுதா ராணி கொடுத்தார். நான் ஏற்கனவே மனு அளித்தபோது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் தன்னையும், தனது குடும்ப உறுப்பினர்களையும் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கூறி இருந்தார். மனுவை படித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசிரியையின் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆசிரியை ஒருவர் கருணை கொலை செய்து கொள்ள அனுமதிக்க கோரி முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story