தெலுங்கானா: பெண்ணுடன் பேசிய நபருடன் தகராறு; ஆளுங்கட்சி தொண்டர் கைது
தெலுங்கானாவில் பெண்ணுடன் பேசிய நபருடன் ஏற்பட்ட தகராறில் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியின் தொண்டரை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் யூசுப்குடா பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நரசிம்ம நகர் என்ற இடத்தில் சந்து என்பவர் பெண் ஒருவருடன் இரவில் பேசி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த லலித் என்பவர் அவரிடம் சென்று, பல குடும்பங்கள் வசிக்க கூடிய பகுதியில் நிற்க கூடாது என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதில், வாக்குவாதம் முற்றி லலித்தின் பைக்கை சந்து தள்ளி விட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சந்து கல் ஒன்றை எடுத்து பாஸ்கர் என்பவரை தாக்கியுள்ளார்.
இதன்பின்பு, பாஸ்கர் ஆத்திரத்தில் தன்னுடைய 4 நண்பர்களுடன் சென்று சந்துவை கம்புகள் உள்ளிட்டவற்றை கொண்டு அடித்து, தாக்கியுள்ளார். இதில், சந்து சிகிச்சை பெற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்.
அவரை 4 பேர் சேர்ந்து கொண்டு தெருவில் வைத்து, தாக்கும் வீடியோ ஒன்றும் வைரலானது. இதனை அடிப்படையாக கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாஸ்கர் மற்றும் லலித் இருவரையும் போலீசார் காவலுக்கு அழைத்து சென்றனர். மற்றவர்களை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.
இதில் பாஸ்கர் என்பவர் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஜுபிளி ஹில்ஸ் தொகுதியின் எம்.எல்.ஏ.வான மகந்தி கோபிநாத் என்பவரின் தனி உதவியாளர் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறின. ஆனால், போலீசார் இதனை மறுத்துள்ளனர்.