என்னை பார்த்து தெலுங்கானா முதல்-மந்திரிக்கு அச்சம்: ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி


என்னை பார்த்து தெலுங்கானா முதல்-மந்திரிக்கு அச்சம்: ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி
x

என்னை பார்த்து தெலுங்கானா முதல்-மந்திரி பயந்து விட்டார் என சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கூறியுள்ளார்.



ஐதராபாத்,


தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற பெயரிலான கட்சியை, ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி கடந்த செவ்வாய் கிழமை காரில் புறப்பட்டு சென்றார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து, போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். இதன்பின், காரில் சர்மிளா அமர்ந்து இருந்தபோதே, அவரை வழிமறித்து கிரேன் கொண்டு போலீசார் காரை தூக்கி சென்றனர். அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களும் காரின் பின்னால் ஓடினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் சர்மிளா சிறை வைக்கப்பட்டார். பஞ்சகட்டா காவல் நிலையத்தில் சர்மிளாவுக்கு எதிராக ஐ.பி.சி.யின் 353, 333, 327 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சர்மிளாவின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மா புறப்பட்டு உள்ளார். எனினும், தெலுங்கானா போலீசார் அவரை வீட்டு காவலில் சிறை வைத்தனர்.

இது தெலுங்கானா அரசியலில் பரபரப்புடன் பேசப்பட்டது. இந்த நிலையில் சர்மிளா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, போலீசார் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த பாதயாத்திரை நடக்க கூடாது என்று கே.சி.ஆரே முன்னின்று இதனை செய்து வருகிறார். போலீசாரை அவர் பயன்படுத்துகிறார். காவல் துறையின் தோளில் நின்று தாக்குதல் நடத்துகிறார் என சர்மிளா கூறியுள்ளார்.

பா.ஜ.க.வின் பண்டி சஞ்சய்யின் பாதயாத்திரை ஒன்றும் தீவிரமில்லை என கே.சி.ஆருக்கே தெரியும். ஆனால், எனது கட்சிக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை அவரால் சகித்து கொள்ள முடியவில்லை.

அவருக்கு மாற்றான ஒரு நபராக சர்மிளாவை மக்கள் அங்கீகரிக்க தொடங்கி விட்டனர் என்ற உண்மையால் அவர் நிச்சயம் பயந்து போயுள்ளார். கே.சி.ஆர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. அவரால் ஆட்சிக்கு வரமுடியாது என அவருக்கே தெரியும் என்று சர்மிளா கூறியுள்ளார்.

1 More update

Next Story