தெலுங்கானா: மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற பெண் போலீசார்; வைரலான வீடியோ


தெலுங்கானா:  மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற பெண் போலீசார்; வைரலான வீடியோ
x

தெலுங்கானா போலீசார் இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்த கவிதா வலியுறுத்தி உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகத்திற்கு உரிய நிலப்பகுதியை புதிய ஐகோர்ட்டு வளாக கட்டுமானத்திற்காக வழங்க அரசு சமீபத்தில் முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பா.ஜ.க.வின் கருத்தியல் சார்ந்த வழிகாட்டியாக உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், அந்த அமைப்பில் உள்ள மாணவி ஒருவரை தெலுங்கானா பெண் போலீசார் துரத்தி சென்று, அவருடைய தலைமுடியை பிடித்து இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் சில அடிகள் தூரம் ஓடி செல்கிறார். அவரை ஸ்கூட்டி ஒன்றில் 2 பெண் போலீசார் விரட்டி செல்கின்றனர். அப்போது, பின்னால் அமர்ந்திருந்த பெண் போலீஸ், மாணவியின் நீண்ட தலைமுடியை பற்றி பிடித்து கொள்கிறார். இதனால், அந்த மாணவி கீழே விழுகிறார். சிறிது தூரம் வரை ஸ்கூட்டி சென்று பின்னர் நிற்கிறது.

இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்திற்கு பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான கவிதா, கண்டனம் தெரிவித்து அந்த வீடியோவையும் எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

அமைதியான முறையிலான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை தரதரவென இழுத்து சென்றது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இதற்காக தெலுங்கானா போலீசார் மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இதன்மீது மனித உரிமைகள் ஆணையமும் விரைந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story