தெலுங்கானாவில் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட பொது அனுமதி வாபஸ்


தெலுங்கானாவில் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்ட பொது அனுமதி வாபஸ்
x

கோப்புப்படம்

தெலுங்கானாவில் பா.ஜனதாவுடன் மோதல் வலுத்த நிலையில் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியை மாநில அரசு வாபஸ் பெற்றது.

ஐதராபாத்,

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., ஏதேனும் ஒரு வழக்கு தொடர்பாக ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் விசாரணை நடத்த வேண்டுமானால், அந்த மாநில அரசால் சி.பி.ஐ.க்கு பொது அனுமதி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். 1946-ம் ஆண்டின், டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டத்தின் 6-வது விதிமுறைப்படி இது கட்டாயம்.

ஆனால், சமீபகாலமாக மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டதால், மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், பஞ்சாப், மேகாலயா உள்பட 8 மாநிலங்கள் இந்த பொது அனுமதியை வாபஸ் பெற்று விட்டன. அப்படி வாபஸ் பெற்றிருந்தால், ஒவ்வொரு வழக்கையும் பதிவு செய்வதற்கு அந்தந்த மாநில அரசிடம் சி.பி.ஐ. முன்அனுமதி பெற வேண்டும்.

இந்தநிலையில், தெலுங்கானா மாநில அரசும், சி.பி.ஐ.க்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை வாபஸ் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்டு 30-ந் தேதியே இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது வெளியில் தெரிவிக்கப்படவில்லை.

4 தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜனதா சார்பில் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்அனுமதி தேவை

நேற்று முன்தினம் இதன் விசாரணை நடந்தபோது, மாநில அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாநிலத்தில் சி.பி.ஐ.க்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதி வாபஸ் பெறப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இனிமேல், மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமானால், ஒவ்வொரு வழக்குக்கும் சி.பி.ஐ. முன்அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சிப்பதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி குற்றம் சாட்டி வருவதால், சமீபகாலமாக இரு கட்சிகள் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த பின்னணியில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story