தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வின் வெற்றி செல்லாது - ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வின் வெற்றி செல்லாது என்ரு ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொத்தகுடம் தொகுதியில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதியின் சார்பில் போட்டியிட்ட வானமா வெங்கடேஷ்வர ராவ் வெற்றிப்பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த தேர்தலில் வானமாவுக்கு அடுத்தப்படியாக அதிக வாக்குகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜலகம் வெங்கட்ராவ், வானமா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பொய்யான தகவல்களை தெரிவித்ததாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் ஜலகம் வெங்கட்ராவ் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார். எனினும் வானமாவுக்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.
சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையின் முடிவில், வானமாவின் வெற்றி செல்லாது என தெலுங்கானா ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அதோடு பொய்யான பிரமாண பத்திரம் சமர்ப்பித்ததற்காக வானமாவுக்கு ஐகோர்ட்டு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக, 2018 தேர்தலில் 2-ம் இடத்தை பிடித்த ஜலகம் வெங்கடராவ் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வாக அறிவிக்கப்பட்டுள்ளார்.