பசவராஜ் பொம்மையுடன், ஜே.பி.நட்டா தொலைபேசியில் பேச்சு; 'உங்கள் தலைமையிலேயே சட்டசபை தேர்தலை பா.ஜனதா எதிர்கொள்ளும்'


பசவராஜ் பொம்மையுடன், ஜே.பி.நட்டா தொலைபேசியில் பேச்சு; உங்கள் தலைமையிலேயே சட்டசபை தேர்தலை பா.ஜனதா எதிர்கொள்ளும்
x

முதல்-மந்திரியை மாற்றும் விவகாரம் தொடர்பாக பசவராஜ் பொம்மையை, ஜே.பி.நட்டா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களது தலைமையிலேயே சட்டசபை தேர்தலை பா.ஜனதா எதிர்கொள்ளும் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை அதிருப்தி

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக தகவல்கள் பரவி வந்தது. இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

முதல்-மந்திரி மாற்றப்படுவதாக தகவல் பரவியதால் பசவராஜ் பொம்மையும் கடும் அதிருப்தி அடைந்தார். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து தனது நெருங்கிய மந்திரிகளிடம் கட்சி மேலிடம் மற்றும் பிற தலைவர்கள் மீது அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

ஜே.பி.நட்டா பேச்சு

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேற்று முன்தினம் இரவு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது 'உங்கள் மீது பா.ஜனதா மேலிடத்திற்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களை மாற்றும் எண்ணம் கட்சிக்கு இல்லை. உங்களது தலைமையிலேயே சட்டசபை தேர்தல் எதிர்கொள்ளப்படும்.

நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். அரசு மற்றும் கட்சியை பலப்படுத்தி அடுத்த சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராவதுடன், பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுங்கள்' என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார். இதன்காரணமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உற்சாகம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.


Next Story