அரசியல் நோக்கத்திலான பாடங்களை ஏற்க சொல்வது சர்வாதிகாரம்; கர்நாடக அரசுக்கு சித்தராமையா கண்டனம்
அரசியல் நோக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடங்களை ஏற்க சொல்வது சர்வாதிகாரம் என்று கூறி கர்நாடக அரசுக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குறை சொல்லவில்லை
கர்நாடக அரசு பள்ளி பாடத்திட்டத்தில் பசவண்ணர், அம்பேத்கர், தேசியகவி குவெம்பு, நாராயணகுரு, பெரியார் போன்ற மகான்களின் பாடங்களை நீக்கியது அல்லது குறைத்தது. இதன் மூலம் அவர்களுக்கு அவமானம் இழைக்கப்பட்டது. ஆனால் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் 3 மந்திரிகளுடன் பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டி சில தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதை கண்டிக்கிறேன். அந்த 4 மந்திரிகளுக்கும் கல்வித்துறை குறித்த தகவல்கள் இல்லாதவர்கள்.
பாடப்புத்தகங்கள் அரசியல் மயமாக்கப்பட கூடாது என்று கல்வி ஆணையம் கூறியுள்ளது. பாடத்திட்டத்தில் அரசியல் சாசனத்தின் விருப்பங்கள் இருக்க வேண்டும். கற்பிக்க கூடாத விஷயங்களில் முக்கியமாக வன்முறைகள், பகை, அருவெறுப்பு, மூடநம்பிக்கை, பாரபட்ச குணங்கள் இடம் பெற்றுள்ளன. எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன. அதை அப்போது யாரும் குறை சொல்லவில்லை.
சர்வாதிகாரம்
ஆனால் கர்நாடக அரசு தற்போது மாற்றியுள்ள பாடத்திட்டத்தை கல்வியாளர்கள், ஆளும் பா.ஜனதாவின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலரே எதிர்த்துள்ளனர். தற்போது மாநில அரசு புதிய பாடங்களை சேர்த்துள்ளனர். அதில் 95 சதவீதம் பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதிலும் அவர்களில் பெரும்பாலானோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அரசியல் நோக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடங்களை ஏற்க வேண்டும் என்று கூறுவது சர்வாதிகாரம். குவெம்பு 2-வது தேசிய கவி என்று குறிப்பிட்டுள்ளனர். முதல் தேசிய கவி கோவிந்த பை என்று தெரிவித்து இருக்கிறார்கள். இது குவெம்புக்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும். மேலும் குவெம்புவின் படத்தையும் நீக்கியுள்ளனர். எங்கள் ஆட்சியில் கெம்பேகவுடா பாடம் கைவிடப்பட்டதாக பொய் தகவலை இந்த அரசு கூறியுள்ளது. அதனால் தற்போது பள்ளி பாடத்திட்டத்தில் திருத்தப்பட்ட தகவல்களை நீக்கிவிட்டு பழைய பாடங்களை தொடர அனுமதிக்க வேண்டும். பொய் தகவல்களை கூறிய மந்திரிகளை நீக்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.