ஒன்னாளி அருகே கத்தியால் குத்தி கோவில் பூசாரி கொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஒன்னாளி அருகே கத்தியால் குத்தி கோவில் பூசாரியை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
கோவில் பூசாரி கொலை
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா தொட்டகெரே கிராமத்தை சேர்ந்தவர் குமாரப்பா (வயது 40). இவர் அதே பகுதியில் உள்ள கடுகட்டே பீரலிங்கேஸ்வரர் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குமாரப்பா தொழில் அதிபர் ஒருவரை பார்த்து பணம் வாங்கிவிட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் குமாரப்பாவை தேடி சென்றனர். அப்போது கோவில் அருகே உள்ள வயல்வெளியில் குமாரப்பா கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோதுகுமாரப்பாவின் உடலில் 5 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது. முன்விரோதத்தில் மர்ம நபர்கள் யாரோ அவரை குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை குறித்து ஒன்னாளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி
வருகின்றனர்.