2 கடைகளில் பயங்கர தீ; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
சுள்ளியா மார்க்கெட்டில், 2 கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் பொருட்கள் சேதமடைந்தது.
மங்களூரு;
2 கடைகளில் தீ
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் மார்க்கெட் ஒன்று உள்ளது. இந்த மார்க்கெட்டில் எலெக்ட்ரானிக் பொருட்கள், பழக்கடைகள் போன்ற கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் பலோலி என்பவருக்கு சொந்தமான எந்திர பொருட்கள் கடை உள்ளது. சம்பவத்தன்று அவர் தனது கடையை பூட்டிவிட்டு இரவு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் அவரது கடையில் இருந்து அதிகாலை அளவில் கரும்புகையுடன் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ அருகில் இருந்த கடைக்கு பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதுகுறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கடைகளின் உரிமையாளர்களுக்கும், சுள்ளியா தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கடைகளில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து, நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
பல லட்சம் ரூபாய் பொருட்கள்
எனினும், 2 கடைகளிலும் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதற்கிடையே தகவல் அறிந்து கடைகளின் உரிமையாளர்களான ரமேஷ் பலோலி மற்றும் நூடன் ஆகிய 2 பேரும், சுள்ளியா போலீசாரும் வந்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதும், அந்த தீ அருகில் உள்ள கடைக்கு பரவி 2 கடைகளும் தீயில் எரிந்து நாசமானது தெரியவந்தது.
எனினும், மர்மநபர்கள் யாரேனும் தீவைத்து சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த தீவிபத்தில் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.