பெங்களூரு வரைபடத்தை காஷ்மீருக்கு அனுப்பி வைத்த பயங்கரவாதி அக்தர் உசேன்


பெங்களூரு வரைபடத்தை காஷ்மீருக்கு அனுப்பி வைத்த பயங்கரவாதி அக்தர் உசேன்
x

பெங்களூரு வரைபடத்தை பயங்கரவாதி அக்தர் உசேன் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது தெரியவந்து உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு வரைபடத்தை பயங்கரவாதி அக்தர் உசேன் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது தெரியவந்து உள்ளது.

பயங்கரவாதத்தால் ஈர்ப்பு

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை கொடுத்த தகவலின்பேரில், பெங்களூரு திலக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி என்கிற ஜூபாவை போலீசார் கைது செய்தார்கள்.

இந்த நிலையில் கைதான அக்தர் உசேன் லஸ்கரை பெங்களூரு தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அக்தர் உசேன் லஸ்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அக்தர் உசேன் சிறுவயதில் இருந்து பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளார்.

காவலாளி வேலை

அவர் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் பேசும் வீடியோவை தொடர்ந்து பார்த்து வந்து உள்ளார். மேலும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றி விடப்படுகின்றன என்று நினைத்த அவர் இந்து அமைப்புகளின் தலைவர்களை பழிவாங்க திட்டமிட்டு உள்ளார். இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு தனது 17 வயதில் அசாமில் இருந்து வேலை தேடி அக்தர் உசேன் லஸ்கர் பெங்களூருவுக்கு வந்து உள்ளார்.

ஆனால் மைனர் என்பதால் அவருக்கு பெங்களூருவில் வேலை கிடைக்கவில்லை. பின்னர் அக்தர் உசேன் மீண்டும் அசாமுக்கு சென்று உள்ளார். பின்னர் 2 ஆண்டுகள் கழித்து பெங்களூரு வந்த அவர் ஆடை விற்பனை, காவலாளி உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்து உள்ளார். இதன்பின்னர் திலக்நகரில் அசாம் மாநிலத்தினர் வசித்து வந்த வீட்டில் தங்கி இருந்து உணவு விற்பனை பிரதிநிதி வேலையும் செய்து வந்து உள்ளார்.

ஆப்கானிஸ்தான் செல்ல திட்டம்

உணவு விற்பனை பிரதிநிதி என்ற பெயரில் பெங்களூரு நகர் முழுவதும் சுற்றிய அக்தர் உசேன் பெங்களூருவில் முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்து கொண்டதாகவும், மேலும் பெங்களூருவை பற்றிய வரைபடம் ஒன்றை தயாரித்து காஷ்மீருக்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அல்-கொய்தா அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்து வந்த அக்தர் உசேனுக்கு அல்-கொய்தா பயங்கரவாதிகள் டெலிகிராம், வாட்ஸ்-அப் மூலம் ஒரு குரானை அனுப்பி வைத்து உள்ளனர். அந்த குரானில் ஜிகாத், உயிர்பலி கொடுப்பது, முஸ்லிம் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி கூறப்பட்டு இருந்தது.

அந்த குரானை அக்தர் உசேன் தொடர்ந்து படித்து வந்து உள்ளார். மேலும் 15 நாட்களில் காஷ்மீருக்கு சென்று அல்-கொய்தா அமைப்பில் இணைந்து பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு செல்லவும் அக்தர் உசேன் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் நாசவேலையில் ஈடுபட அக்தர் உசேன் சதிதிட்டம் தீட்டி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story