இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமையுமா..? - எலான் மஸ்க் நிபந்தனை
இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமையுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி,
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். பெங்களூரு நகரில் டெஸ்லா தொழிற்சாலை அமைக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் நிபந்தனை விதித்தார். இந்தியாவில் கார் தொழிற்சாலை அமைக்க டெஸ்லா நிறுவனம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று எலான் மஸ்க் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, "இந்தியாவில் எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை விற்பனை செய்வதை வரவேற்கிறோம். ஆனால், எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா கார்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். இந்தியாவில் தயாரித்தால் மட்டுமே டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்க முடியும். சீனாவில் தயாரிக்கப்பட்ட காரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது" என்று தெரிவித்திருந்தார். .
இந்நிலையில் டுவிட்டரில் தனிநபர் ஒருவர், " இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை எதிர்காலத்தில் அமைக்கும் திட்டம் இருக்கிறதா" என்று எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பிஇருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், "டெஸ்லா நிறுவனத்தின் கார்களை விற்பனை செய்வதற்கும், கார்களின் சர்வீஸ்களுக்கும் அனுமதி வழங்காதவரை எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை அமைக்காது" என்று அவர் தெரிவித்தார்.