தசரா விழாவில் பங்கேற்கும் 2-ம் கட்ட யானைகள் இன்று மைசூரு வருகை


தசரா விழாவில் பங்கேற்கும்  2-ம் கட்ட யானைகள் இன்று மைசூரு வருகை
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:46 PM GMT)

தசரா விழாவில் பங்கேற்கும் 2-ம் கட்ட யானைகள் இன்று (திங்கட்கிழமை) மைசூரு வருகிறது என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மைசூரு

மைசூரு தசரா விழா

மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் மைசூரு நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

தசரா விழாவின் ஜம்பு சவாரி ஊர்வலம் எனப்படும் யானைகள் ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24 தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இந்த விழாவில் 14 யானைகள் கலந்து கொள்கின்றன. முதல் கட்டமாக கடந்த 5-ந்தேதி 9 யானைகள் உன்சூர் வனப்பகுதியில் இருந்து அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவற்றில் அர்ஜுனா என்ற யானை எச்.டி.கோட்டை தாலுகாவில் ஆட்கொல்லி புலியை பிடிப்பதற்கு சென்றது.

2-ம் கட்ட யானைகள்

இதையடுத்து தசரா விழாவிற்கு குறைந்த நாட்களே இருப்பதால் நடைபயிற்சி உள்ளிட்ட பயிற்சி பெற மீண்டும் அர்ஜுனா யானை அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டது.

அங்கு 9 யானைகளுக்கு காலை, மாலை என 2 நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் 2-ம் கட்டமாக 5 யானைகள் இன்று (திங்கட்கிழமை) மைசூரு அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து மைசூரு மாவட்ட வனத்துறை அதிகாரி சவுரப் குமார் கூறுகையில், மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 14 யானைகளில் முதல்கட்டமாக 9 யானைகள் அரண்மனை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அரண்மனை வளாகத்திற்கு...

இந்தநிலையில் 2-ம் கட்டமாக சாம்ராஜ் நகர் மாவட்டம் கே.குடி வனப்பகுதி, பந்திப்பூர் யானைகள் முகாம், ராம்புறா, துபாரே ஆகிய முகாம்களில் இருந்து இந்த மாதம் இன்று (திங்கட்கிழமை) 5 யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது.

அஸ்வத்தாமா, ரோகித், பிரசாந்தா, ஹிரன்யா, லட்சுமி ஆகிய 5 யானைகள் காலை 10 மணிக்கு அந்தந்த முகாம்களில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு மாலை 4 மணிக்கு மைசூரு அரண்மனை வளாகத்திற்கு வருகிறது.

அங்கு அரண்மனை நுழைவு வாயிலில் அரண்மனை மண்டலி சார்பில் 5 யானைகளுக்கு பாரம்பரிய பூஜை நடக்கிறது. மேலும் யானைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்படுகிறது.

வாசனை பயிற்சி

ஏற்கனவே அரண்மனை வளாகத்தில் தங்கி உள்ள யானைகளுக்கு அருகே இந்த யானைகளுக்கும் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் புதிதாக வந்த 5 யானைகள் சேர்த்து 14 யானைகளுக்கும் எடை அளவு எடுக்கப்படுகிறது.

தசரா விழா நெருங்கி வருவதால் 5 யானைகளுக்கு வாகனங்கள் சத்தம், பெட்ேரால்,டீசல், பழங்கள், காய்கறிகள் ஆகிய வாசனை பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பாரம் தூக்கும் பயிற்சியும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story