சட்டசபையில் 40 சதவீத 'கமிஷன்' விவகாரம் தொடர்பாக சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு; சபாநாயகர் காகேரி உத்தரவு


சட்டசபையில் 40 சதவீத கமிஷன் விவகாரம் தொடர்பாக சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிப்பு; சபாநாயகர் காகேரி உத்தரவு
x

சட்டசபையில் 40 சதவீத கமிஷன் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் காகேரி நிராகரித்து உத்தரவிட்டார்.

பெங்களூரு:

40 சதவீத கமிஷன்

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு பூஜ்ஜிய நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எழுந்து, கர்நாடக பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் புகார் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் அனுமதி வழங்குமாறு கோரினார்.

முக்கியமான விஷயம்

அதற்கு பதிலளித்த சபாநாயகர் காகேரி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கொண்டு வந்துள்ள ஒத்திவைப்பு தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாக அறிவித்தார். அதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசும்போது, "40 சதவீத கமிஷன் பெறப்படுவதாக மாநில அரசு மீது புகார் கூறப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் இந்த புகாரை கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது மிக முக்கியமான விஷயம். இதுகுறித்து இந்த சபையில் விவாதிக்க வேண்டியது அவசியம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே இந்த தீர்மானத்தை நிராகரித்து இருப்பது சரியல்ல. இப்படி நாங்கள் கொண்டு வரும் எல்லா தீர்மானங்களையும் நிராகரித்தால் எப்படி?. பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக சுதந்திர தினத்தன்று பேசினார். மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கப்படுகிறது" என்றார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் காகேரி, "நான் உங்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச அனுமதி அளித்துள்ளேன். நீங்கள் விரும்பும் வரை அனுமதி கொடுத்துள்ளேன். நீங்கள் கொடுத்த இந்த தீர்மானம் ஒத்திவைப்பு தீர்மானத்தில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல என்று நான் கருதினேன். அதனால் அதை நிராகரித்துவிட்டேன்" என்றார்.

ஓடி ஒளிய மாட்டோம்

அப்போது சட்டசபை விவகாரத்துறை மந்திரி மாதுசாமி குறுக்கிட்டு, சபை விதிகளை குறிப்பிட்டு பேசினார். அவர் பேசுகையில், "எதிர்க்கட்சி தலைவர் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வரும்போது, அதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். அப்போது தான் அந்த தீர்மானத்தை அனுமதிக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எந்த ஆதாரத்தையும் வழங்காமல் கடிதம் மட்டும் வழங்கியுள்ளார். இதை சபாநாயகர் மனதில் கொள்ள வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "ஊழல் என்பது இப்போது தொடங்கியது அல்ல. இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. நாம் அனைவரும் சேர்ந்து விவாதித்து அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவாதத்தை நடத்தாமல் போனால் அரசுக்கு அவப்பெயர் தான் ஏற்படும். அதனால் இந்த விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதில் இருந்து ஓடி ஒளிய மாட்டோம். இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கலாம்" என்றார்.

ஒத்திவைப்பு தீர்மானம்

இதை ஏற்றுக்கொண்ட சித்தராமையா, ஒத்திவைப்பு தீா்மானத்திற்கு பதிலாக வேறு வடிவத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றார். இதற்கு சம்மதம் தெரிவித்த சபாநாயகர் காகேரி, '40 சதவீத கமிஷன் குறித்து 69-வது விதியின் கீழ் விவாதிக்க அனுமதி வழங்கப்படும்' என்றார். அப்போது ஆளும் பா.ஜனதா உறுப்பினர் ராஜீவ், "நாங்களும் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற ஊழல்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் காகேரி, "பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தையும் சேர்த்து ஒன்றாக அதுபற்றி விவாதிக்க அனுமதி அளிக்கிறேன்" என்றார்.


Next Story