ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: தொடரும் மீட்புப் பணி... திக் திக் நிமிடங்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல் ஷாகு. இந்த சிறுவன் நேற்று மதியம் 2 மணியளவில் தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.
சிறுவனின் அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் கிணற்றுக்குள் விழுந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு, போலீசார், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
50 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில், 65 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்ட மீட்புக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் ஆக்ஜிஜனை அனுப்பி மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.