கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு: கானாபுரா-கோவாவை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது


கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு: கானாபுரா-கோவாவை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது
x

வடகர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கானாபுரா-கோவாவை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 30 கிராமங்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

பெலகாவி:

1¼ லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

வடகர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள துங்கபத்ரா, பசவசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள ஏராளமான கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விடும் அபாயமும் உள்ளது. கொப்பலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள துங்கபத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

அந்த அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி தண்ணீர் கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் பாய்ந்து ஓடியது. கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஹம்பியில் உள்ள புராதன சின்னங்களை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது. அங்கு உள்ள கோடிலிங்கா ராம, லட்சுமண் கோவிலை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

30 கிராமங்களின் இணைப்பு துண்டிப்பு

மேலும் கம்பளி-கங்காவதி நகரங்களை இணைக்கும் ஆற்றுப்பாலம் மூழ்கி உள்ளது. இதனால் அந்த 2 நகரங்களுக்கு இடையே போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது. பெலகாவி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அந்த மாவட்டத்தில் ஓடும் வேதகங்கா, தூத்கங்கா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தூத்கங்காவில் ஏற்பட்டு உள்ள வெள்ளத்தால் சிக்கோடி தாலுகாவில் உள்ள 2 பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. வேதகங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தால் கானாப்புரா தாலுகாவில் உள்ள 5 பாலங்கள் தண்ணீரில் மூழ்கின.

மேலும் கானாபுரா-கோவாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 4-ல் வேதகங்கா ஆற்றின் குறுக்கே அமைந்து உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் கானாபுரா-கோவா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள 30 கிராமங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தூத்கங்கா ஆற்று வெள்ளத்தால் நிப்பானி தாலுகா கர்நாகா கிராமத்தில் உள்ள பங்காலி பாவா கோவிலும் தண்ணீரில் மூழ்கியது.

வாலிபரை கன்னத்தில் அறைந்த என்ஜினீயர்

துங்கபத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொப்பல் மாவட்டம் முனிராபாத்தில் உள்ள முனிராபாத்-ஒசப்பேட்டேயை இணைக்கும் சாலையில் உள்ள ஆற்றுப்பாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கு யாரும் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆபத்தை உணராமல் அந்த பாலத்தின் மீது நின்று வாலிபர்கள் செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர்.

அப்போது அங்கு சென்ற நீர்பாசனத்துறை என்ஜினீயர் ஒருவர் செல்பி எடுத்த வாலிபர் ஒருவரை பிடித்து கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனை பார்த்து மற்ற வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.


Next Story