வாழ்த்து பதிவில் ஜி-20 பாரத் என குறிப்பிட்ட இங்கிலாந்து தூதர்


வாழ்த்து பதிவில் ஜி-20 பாரத் என குறிப்பிட்ட இங்கிலாந்து தூதர்
x
தினத்தந்தி 10 Sept 2023 6:47 PM IST (Updated: 10 Sept 2023 10:05 PM IST)
t-max-icont-min-icon

ஜி-20 உச்சி மாநாடு பற்றிய வாழ்த்து பதிவில் இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ், ஜி-20 பாரத் என குறிப்பிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 2 நாட்களாக ஜி-20 உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில், மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய இசை கச்சேரியுடன் கூடிய, இரவு விருந்தும் நேற்று வழங்கப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ், எக்ஸ் சமூக ஊடகத்தில் இன்று வெளியிட்ட பதிவில், இலக்குடன் கூடிய, அனைத்தும் உள்ளடக்கிய, தீர்மானிக்கப்பட்ட மற்றும் செயல் சார்ந்த ஜி-20 தலைமைத்துவம் மற்றும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு வாழ்த்துகள்.

இதில் தொடர்புடைய அனைவருக்கும், அதிதி தேவோ பவ (விருந்தினர்கள் கடவுளுக்கு சமம்) என மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்திய, விருந்தளித்த நம்முடைய இந்தியர்களுக்கும் ஒரு பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

அவர் மற்றொரு பதிவில், ஜி-20 அமைப்புக்கும் மற்றும் அமிதாப் கந்துக்கும் வாழ்த்துகள். வருகை தந்த ரிஷி சுனக் மற்றும் அவருடைய மனைவிக்கும் நன்றி.

இலக்குடன் கூடிய, அனைத்தும் உள்ளடக்கிய, செயல் சார்ந்த ஜி-20 உச்சி மாநாடு. ஜி-20 இந்தியா ஜி-20 பாரத் என ஹேஷ்டேக்கில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியாவுக்கான தன்னுடைய 2 நாள் பயணம் முடிந்ததும் இன்று நாடு திரும்பியுள்ளார். அவர் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த வெள்ளி கிழமை, தன்னுடைய மனைவி அக்சதா மூர்த்தியுடன் வருகை தந்ததுடன், சுவாமிநாராயண் அக்சர்தம் கோவிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். இதன் பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.


Next Story