இரு கட்சியினர் மோதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது


இரு கட்சியினர் மோதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது
x

சித்தராமனகுந்தியில் பா.ஜனதா-காங்கிரசார் இடையே நடந்த மோதல் சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

ராய்ச்சூர்:-

இருகட்சிகள் மோதல்

மைசூரு மாவட்டம் வருணா தொகுதிக்கு உட்பட்ட சித்தராமனகுந்தி கிராமம், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் சொந்த ஊர் ஆகும். நேற்று முன்தினம் இரவு பா.ஜனதா வேட்பாளர் வி.சோமண்ணா, பிரதாப் சிம்ஹா எம்.பி. ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்காக சித்தராமனகுந்தி கிராமத்திற்கு சென்றனர். அப்போது பா.ஜனதா தேர்தல் வாகனம் மீது கல்வீசி தாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் பா.ஜனதா நிர்வாகி நாகேஷ் காயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், சித்தராமையாவின் சகோதரர் மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கண்டித்தக்கது

இந்த சம்பவம் தொடர்பாக ராய்ச்சூரில் சித்தராமையா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சித்தராமானகுந்தியில் நேற்று (நேற்று முன்தினம்) இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் பா.ஜனதாவினர் தான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளனர். இரு கட்சியினர் மோதிக்கொள்வது தேவையற்றது. இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

சித்தராமனகுந்தியில் நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவம் மாநிலத்தில் வேறு எங்கும் நடைபெற கூடாது. எந்தவொரு அரசியல் கட்சிகளும் எங்கு வேண்டுமானாலும் பிரசாரம் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

யதீந்திரா குற்றச்சாட்டு

இதுகுறித்து வருணா தொகுதி எம்.எல்.ஏ.வும், சித்தராமையா மகனுமான யதீந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சித்தராமனகுந்தியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் சிலருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கு பா.ஜனதா அரசியல் சாயம் பூசியுள்ளது. பா.ஜனதா அடிப்படையில் ஒரு கலகக் கட்சி. அவர்கள் இடைவிடாதகலவரம் செய்தனர். காங்கிரஸ் தொண்டர்களை தூண்டிவிடக்கூடாது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜனதா இப்படி வியூகம் வகுக்கிறது.

அப்பட்டமான பொய்களை கூறிவெறுப்பை பரப்புகிறது. சலசலப்பின் போது சித்தராமையாவும், நான் உள்பட குடும்பத்தினர் அங்கு இல்லை. தவறான நோக்கத்துடன் எங்கள் குடும்பத்தினர் மீது போலீசார் புகார் அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story