அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது - ப.சிதம்பரம்
அமலாக்கத்துறையின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் காங்கிரஸ் அடிபணியாது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங். தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை சம்மனை தொடர்ந்து டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜரானார்.
சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜம்மு, கேரளா, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் காங். கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தநிலையில், டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,
நேஷனல் ஹெரால்டு பற்றிய கனக்கு விவரங்கள் முறையாக வருமான வரித்துறை முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வருமான வரித்துறையின் ஆவணங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
நேஷனல் ஹெரால்டு பற்றி வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டை விட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு காங்கிரஸ் கட்சி அடிபணியாது என கூறியுள்ளார்.
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் கொடுக்கப்பட நேரத்தை தாண்டி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டார்.