நாட்டில் எல்லைப்பிரச்சினையை உருவாக்கிய காங்கிரஸ் ஒற்றுமை பாதயாத்திரை நடத்துகிறது
நாட்டில் எல்லைப்பிரச்சினையை உருவாக்கிய காங்கிரஸ் தற்போது ஒற்றுமை பாதயாத்திரை நடத்துகிறது என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
மத்திய மந்திரி ஷோபா பேட்டி
மத்திய மந்திரி ஷோபா கரந்தலாஜே, சிக்கமகளூருவுக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்தார். இதையடுத்து அவர் பா.ஜனதா அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
ராகுல் காந்தியின் பாதயாத்திரை தேவையில்லாதது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தான் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நாட்டின்
எல்லைப்பகுதியில் பிரச்சினை உருவாக்கியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். நாட்டின் எல்லைப்பகுதியில் அண்டை நாடுகளுடன் பிரச்சினைகளை உருவாக்கி விட்டு தற்போது நாட்டை ஒற்றுமைப்படுத்துவதாக பாதயாத்திரை செல்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெறாது என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
முதல்-மந்திரியாக விடுவாரா?
முதலில் சித்தராமையா கட்சி பிரச்சினைகளை சரி செய்து கொள்ள வேண்டும். முதல்-மந்திரி வேட்பாளர் சித்தராமையா என்று தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்
காந்தி அறிவித்துள்ளார்களா அல்லது மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தான் சித்தராமையாவை முதல்-மந்திரியாக விடுவாரா?. இந்த சூழலில் முதலில் அவர் தன் கட்சி பிரச்சினைகளை சரி செய்து கொள்ளட்டும். இந்தியாவில் காங்கிரஸ் இறந்து விட்டது.
தேசத்தில் பல்வேறு குழப்பத்தை உருவாக்கியது காங்கிரஸ் கட்சி.. ராகுல்காந்தி காங்கிரசின் தலைவர் பொறுப்பில் இருக்கும்போது எதையும் சாதிக்கவில்லை. அதேபோல் பிரியங்காவும் உத்தரபிரதேசத்தில் எதையும் சாதிக்க முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தலைவராக ராஜீவ்காந்தி குடும்பத்தினர் இருந்து வந்தநிலையில் தற்போது அவர்கள் இல்லாத ஒருவருக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.