குற்றச்சம்பவங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேச்சு


குற்றச்சம்பவங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேச்சு
x

குற்றச்சம்பவங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று குறைகேட்பு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேசினார்.

சிக்கமகளூரு;

குறைகேட்பு கூட்டம்

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் ராமனஹள்ளி அருகே அம்பேத்கர் பவனில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார். அப்போது, சிக்கமகளூரு டவுனில் வழிபறி சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடப்பதாகவும், இதனை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேசியதாவது:- குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க டவுன் கூடுதல் போலீசார் ரோந்து செல்வார்கள். இரவு நேரங்களில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை பிடித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வங்கி லாக்கர்களில் வைப்பது பாதுகாப்பானது. போலீசார் கூறும் அறிவுரைகளை ஏற்று, அதன்படி செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

முன்பின் தெரியாதவர்கள் யாரேனும், வீட்டுக்கு வந்தால் அவர்களை வாசலில் வைத்து பேச வேண்டும். அசம்பாவிதங்கள் ஏதும் நடந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும். போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா ராமனஹள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீசாா் பயிற்சி மேற்கொண்டதை பார்வையிட்டார். மேலும், பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட போலீசார் 50 பேருக்கு சிறப்பு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.


Next Story