பெற்ற மகளின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் நிற்க வைத்த கொடூர தாய்... மகனுக்கும் கொடுமை


பெற்ற மகளின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் நிற்க வைத்த கொடூர தாய்... மகனுக்கும் கொடுமை
x

டெல்லியில், பெற்ற மகளின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் மொட்டைமாடியில் கொடூர தாய் நிற்க வைத்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,



டெல்லியின் கராவல் நகரின் துக்மீர்பூர் நகரில் வசித்து வரும் தம்பதி ராஜ்குமார் மற்றும் சப்னா. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், வீட்டு பாடம் செய்யவில்லை என்பதற்காக 1ம் வகுப்பு படிக்கும் தனது மகளின் கை, கால்களை கயிறு ஒன்றால் இறுக கட்டி உச்சி வெயிலில் மொட்டைமாடியில் சப்னா நிற்க வைத்துள்ளார்.

வெயில் அதிகரித்து, அந்த சிறுமி சுருண்டு படுத்துள்ளது. சற்று நேரம் அழுதுள்ளது. சிறுமியின் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த சிறுமியின் மாமா சுனில் உள்ளிட்ட உறவினர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர். பின்னர் சிறுமியை கீழே கொண்டு வந்தனர்.

இதுபற்றி சுனில் கூறும்போது, ஒவ்வொரு சிறு விசயத்திற்காகவும் தனது குழந்தைகளை அவர்களின் தாயார், அடித்து வருகிறார். இயற்கையிலேயே அதிக கோபக்கார பெண்மணி. அவர் அடிக்கும்போது நாங்கள் யாராவது தடுக்க சென்றால், அவர்கள் எங்களுடைய குழந்தைகள். அவர்கள் மீது எங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது என அந்த தாய் கூறி விடுவார்.

இதற்கு முன்பு அவர் இப்படி இருந்தது இல்லை. கடந்த 2, 3 ஆண்டுகளாகவே இப்படி நடந்து கொள்கிறார் என கூறியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் எப்போதும் தகராறில் ஈடுபடும் பழக்கம் உள்ளவர் அவர் என சிறுமியின் அத்தை பூஜா கூறியுள்ளார். சிறுமியிடன் மட்டுமின்றி, மகனிடமும் இதுபோன்று நடந்து கொள்வார்.

அதனை நாங்கள் தடுக்க சென்றால், கூடுதலாக அவர்களுக்கு அடி கிடைக்கும். அதனால், அவர் என்ன வேண்டுமென்றாலும் கூறி விட்டு போகட்டும் என நாங்கள் விட்டு விடுவோம் என கூறியுள்ளார்.

இதேபோன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரதீப் கூறும்போது, குழந்தைகளின் அழுகை சத்தம் அந்த வீட்டில் இருந்து எப்போதும் கேட்டு கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் கூட, அவரது மகனை ஆடைகள் இன்றி வெற்றுடலுடன் நிற்க வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

இதன்பின்னர், பக்கத்தில் வசிப்பவர்கள் சென்று சிறுவனுக்கு ஆடைகளை கொடுத்தனர் என கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story