கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியாகிறது. 14 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு:
உயர்நிலை கூட்டம்
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே போல் ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆளும் பா.ஜனதா இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பா.ஜனதாவின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக அந்த கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதிய முகங்கள்
இதில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சுமார் 14 தொகுதிகளில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டு, அங்கு புதிய முகங்களை களம் இறக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுளளது.
அதில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் திப்பாரெட்டி, எம்.பி.குமாரசாமி, சுதாகர் ஷெட்டி, ஈசுவரப்பா, நேரு ஓலேகார் போன்றவர்களுக்கு டிக்கெட் கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறுகையில், "பா.ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியல் நாளை (இன்று) வெளியாக உள்ளது. இதில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் இடம் பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சியில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து டிக்கெட் வழங்கப்படுகிறது" என்றார்.