அதானி விவகாரத்தில்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலமே முழு உண்மைகள் வெளிவரும்காங்கிரஸ் உறுதி
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலமே முழுமையான உண்மைகள் வெளிவரும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
புதுடெல்லி,
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலமே முழுமையான உண்மைகள் வெளிவரும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
அதானி நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் புகார் தெரிவித்து இருந்தது.
இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு குறைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்ததே இதற்கு காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில், 'எல்.ஐ.சி.யின் சந்தை மூலதன மதிப்பு கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் ரூ.5.48 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் ரூ.3.59 லட்சம் கோடியாகி இருக்கிறது. 35 சதவீதம் சரிவு. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சூறையாடப்பட்டாலும், பங்குதாரர்களின் முதலீடு மூழ்கினாலும், சாகேபின் (பிரதமர் மோடி) ஒரே கவனம், தொழிலதிபர்களை எப்படி பாதுகாப்பது என்பதே' என சாடியுள்ளார்.
இதைப்போல கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், எல்.ஐ.சி.யின் சரிவு மூலம் அதானி ஊழலின் (மோதானி) கூறுகள் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி ஒன்றையும் தனது டுவிட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இதனால்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அவசியம் என வலியுறுத்தி உள்ள அவர், இந்த விவகாரத்தில் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும், அதன்மூலம்தான் மோதானி ஊழலில் முழு உண்மையும் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மூலதனம் 35 சதவீதம் அளவுக்கு சரிந்தது குறித்து அவர் கவலையும் வெளியிட்டு இருந்தார். இந்த சரிவால் லட்சக்கணக்கான பாலிசிதாரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.