சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசே முடிவு எடுக்கலாம்; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசே முடிவு எடுக்கலாம்; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து அரசே முடிவு எடுக்கலாம் என்று கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

ஈத்கா மைதானம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகிறார்கள். அந்த மைதானத்திற்கு வக்பு போர்டு உரிமை கொண்டாடி வந்தது. ஆனால் ஈத்கா மைதானம் அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பிற பண்டிகைகளை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதே நேரத்தில் சாம்ராஜபேட்டை ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தம் என்று கூறிய மாநகராட்சியின் உத்தரவை எதிர்த்து வக்பு போர்டு சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த், ஈத்கா மைதானத்தில் இதற்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதாவது ஈத்கா மைதானத்தில் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின் போது முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், விளையாட்டுக்கு பயன்படுத்தவும் அனுமதி வழங்கி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அரசு முடிவு எடுக்கலாம்

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் ஆராதே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஈத்கா மைதானம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு அனைத்து மத பண்டிகைகளை நடத்துவதற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட மத விழாக்களை கொண்டாடுவதற்கான அனுமதியை வழங்குவது குறித்து அரசே முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன் காரணமாக வருகிற 31-ந் தேதி சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகா சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதி வழங்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வக்பு போர்டு முடிவு செய்திருக்கிறது.


Next Story