நம்ம கிளினிக்குகளின் நேரம் மாற்றி அமைக்க அரசு முடிவு


நம்ம கிளினிக்குகளின் நேரம் மாற்றி அமைக்க அரசு முடிவு
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:45 PM GMT)

பெங்களூருவில் நம்ம கிளினிக்குகளின் நேரத்தை மாற்றி அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இரவு 8 மணி வரை டாக்டர் சிகிச்சை அளிக்கும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது.

பெங்களூரு:-

கூலித்தொழிலாளர்கள்

பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட நம்ம கிளினிக்குகள் இயங்கி வருகின்றன. பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் இதர நகரங்களிலும் இந்த கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளினிக்குகள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணி வரையிலும், பிறகு 2 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 4.30 மணி வரையிலும் இயங்குகின்றன. இந்த கிளினிக்குகளில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் தான் சிகிச்கைக்கு வருகிறார்கள். அவர்களும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் வீட்டுக்கு வருகிறார்கள்.

அதனால் அந்த கூலித்தொழிலாளர்கள் கிளினிக்குகளில் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. இதை மனதில் கொண்டு நம்ம கிளினிக்குகளின் சிகிச்சை நேரத்தை மாற்றி அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நம்ம கிளினிக்குகள் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திறக்கப்படும் என்றும், காலையில் ஆய்வக ஊழியர்கள் வந்து பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகல் 12 மணிக்கு டாக்டர் பணிக்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சை

அவர் இரவு 8 மணி வரை கிளினிக்கில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை செய்வார். இதனால் வேலையை முடித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு வரும் தொழிலாளர்கள், அதன் பிறகு கிளினிக்குகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியும். இந்த நேர மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story