திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்து மணமகன் பலி
கர்நாடகா மாநிலம் விஜயநகராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு புது மாப்பிள்ளை சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரு
கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹோண்ணூறு சுவாமி(26). அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், ஹோண்ணூறு சுவாமிக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.தம்பதிக்கு திருமணம் தடபுடலாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தன்னிலை மறந்து காணப்பட்ட புது மாப்பிள்ளை நெஞ்சு வலி தாங்காமல் மேடையில் அமர்வதும், எழுவதுமாய் அவஸ்தை பட்டார்.நெஞ்சுவலிப்பதாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.
அஜீரண கோளாறாக இருக்கலாம் என கருதிய உறவினர்கள் புது மாப்பிள்ளைக்கு சோடா கொடுத்ததாக கூறப்படுகிறது. சோடா குடித்ததும் சுயநினைவை இழந்த ஹோண்ணூறு சுவாமி மேடையிலே திடீரென மயங்கி விழுந்தார்.
அங்குள்ள கிராம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹோண்ணூர் சுவாமியை பரிசோதித்த மருத்துவர் ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியாதாகவும் சொல்லப்படுகிறது.
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஹோண்ணூர் சுவாமி உயிரிழந்தாக கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மணமகன் உயிரிழந்ததால், விழாக்கோலம் பூண்டிருந்த கிராமம் சோகத்தில் உறைந்துள்ளது.