பா.ஜனதாவை தோற்கடிக்க விரும்பினால் காங்கிரஸ் வேட்பாளரை, ஜனதாதளம் (எஸ்) ஆதரிக்க வேண்டும்- சித்தராமையா அழைப்பு
பா.ஜனதாவை தோற்கடிக்க விரும்பினால் காங்கிரஸ் வேட்பாளரை, ஜனதாதளம் (எஸ்) ஆதரிக்க வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தார்வார்: தார்வாரில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-மதவாத கட்சியான பா.ஜனதாவை மாநிலங்களவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றால், கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைக்க வேண்டும் என்று குமாரசாமி கூறி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை தேர்தலில் சிறுபான்மையினத்தை சேர்ந்தவரை தான் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 2-வது வேட்பாளரை ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரிக்க வேண்டும். விமான நிலையத்தில் வைத்து நானும், எடியூரப்பாவும் சந்தித்து பேசிக் கொண்டதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.
அது ஒரு சாதாரண சந்திப்பு. கர்நாடக மேல்-சபை தேர்தலில் ஆசிரியர் தொகுதியில் 7 முறை போட்டியிட்டு பசவராஜ் ஹொரட்டி வெற்றி பெற்றுள்ளார். தற்போது பதவிக்காக பா.ஜனதாவுக்கு சென்றுள்ளார். ஆசிரியர் தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பசவராஜ் குரிகார் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.