பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை முறைகேடு விசாரணைக்கு உத்தரவிட சட்டசபையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் இரவிலும் தர்ணா


பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை முறைகேடு விசாரணைக்கு உத்தரவிட சட்டசபையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் இரவிலும் தர்ணா
x

பி.எம்.எஸ் கல்வி அறக்கட்டளை முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் இரவிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு: பி.எம்.எஸ் கல்வி அறக்கட்டளை முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் இரவிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் அமளி

கர்நாடக சட்டசபையில் நேற்று பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை குறித்து ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி பேசினார். அப்போது அவர், அந்த அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார். இது தொடர்பாக குமாரசாமிக்கும், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணுக்கும் கடும் வாக்குவாதம் உண்டானது.

இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால், சபையில் அமளி உண்டானது. இதையடுத்து சபாநாயகர் காகேரி, சபையை இன்றைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தார்.

பேச்சுவார்த்தை நடத்தினார்

ஆனால் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் தங்களின் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி தர்ணா நடத்த அவர்கள் முடிவு செய்தனர். இதுகுறித்து அறிந்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் சபாநாயகர் காகேரி சபைக்கு வந்து குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தர்ணா போராட்டத்தை கைவிடுமாறு அவர்கள் கேட்டு கொண்டனர்.

இந்த விவகாரம் குறித்து நாளை (இன்று) சபையில் பதிலளிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உறுதியளித்தார். இதை ஏற்று ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்று வீடுகளுக்கு திரும்பினர்.


Next Story