கர்நாடகத்தின் கலை, கலாசாரத்தை பறைசாற்றும் மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியது


தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:45 PM GMT)

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. சாமுண்டி மலையில் கோலாகலமாக நடந்த விழாவில் சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்கள் தூவி இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைத்தார்.

மைசூரு:

கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. இது கர்நாடகத்தின் பாரம்பரியம், கலை, கலாசாரத்தை பிரதிப்பலிப்பதாக உள்ளது. இது 'நாடஹப்பா' (கர்நாடகத்தின் பண்டிகை) என்றும் அழைக்கப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் தசரா விழாவுக்கு பல்வேறு வரலாறுகள், சிறப்புகள் உள்ளன. முன்ெனாரு காலத்தில் மகிஷாசூரன் என்ற அரக்கன் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததாகவும், அந்த மன்னனிடம் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன்பேரில் கொடுங்கோல் ஆட்சி மன்னனான மகிஷாசூரனிடம் இருந்து மக்களை காக்க வேண்டி பார்வதி தேவி, சாமுண்டீஸ்வரி அம்மன் அவதாரம் மேற்கொண்டு விஜயதசமி அன்று அவனை வதம் செய்தார். சாமுண்டீஸ்வரி அம்மனின் அந்த வெற்றியே ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவாக மக்கள் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது.

14-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் 'மகாநவமி' என் பெயரில் தசரா விழாவை கொண்டாடியதாகவும், பின்னர் 1610-ம் ஆண்டு முதல் 'யது' வம்சத்தினரால் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் வரலாறு கூறுகிறது. முதலில் ஸ்ரீரங்கப்பட்டணாவை தலைமையிடமாக கொண்டு தசரா விழா கொண்டாடப்பட்டது. பின்னர் காலப்போக்கில் மைசூருவை தலைமையிடமாக கொண்டு தசரா விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு கர்நாடகத்தை ஆண்ட அப்போதைய முதல்-மந்திரி தேவராஜ் அர்ஸ் மூலம் தசரா விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அன்று முதல் இன்று வரை நவராத்திரியையொட்டி 10 நாட்கள் மைசூரு தசரா விழா அரசு விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் நவராத்திரியையொட்டி 15-ந்தேதி (நேற்று) தசரா விழா கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தசரா விழாவை திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதலில் தசரா விழா ஆடம்பரமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சி நிலவுவதால் தசரா விழாவை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நேற்று தொடங்கியது. இது 414-வது தசரா விழா ஆகும். மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தசரா விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. காலை 10.15 மணி அளவில் விருச்சிக லக்கனத்தில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருள, முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முன்னிலையில் திரைப்பட இசையமைப்பாளர் ஹம்சலேகா, அம்மன் மீது மலர்தூவி தசரா விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னதாக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், இசையமைப்பாளர் ஹம்சலேகா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தனர்.

இந்த தசரா விழா தொடக்க நிகழ்ச்சியில் மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, வெங்கடேஷ், சிவராஜ் தங்கடகி, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ஹரீஷ் கவுடா, ஸ்ரீவத்ஷா, தன்வீர் சேட், அனில் சிக்கமாது, தர்ஷன் துருவநாராயண், கணேஷ் பிரசாத், ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பிரதாப் சிம்ஹா எம்.பி., மேயர் சிவக்குமார், கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் கமிஷனர் ரமேஷ், போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சாமுண்டி மலையில் தசரா விழா தொடங்கியதும் மைசூரு நகரில் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கின. தசரா விழாவை தொடங்கி வைத்து இசையமைப்பாளர் ஹம்சலேகா பேசியதாவது:-

மைசூரு மாகாணத்தில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம் தனி மாநிலமாக உருவெடுத்தது. இதேபோல், கலை வாழ்க்கையில் நான் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகள் ஆகிறது. எனது 50 ஆண்டுகால கலை வாழ்க்கையில் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இந்த தருணம் எனது வாழ்வின் பொக்கிஷம் ஆகும். தசரா தொடக்க விழாவில் பங்கேற்க சாமுண்டி மலையில் 1000 படிகளை ஏறி வந்துள்ளேன். எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.

விஜயநகர பேரரசு காலத்தில் கொண்டாடப்பட்ட தசரா விழா இன்றளவும் பாரம்பரியம், கலாசாரம் குறையாமல் நடந்து வருகிறது. இது பெருமை அளிப்பதாக உள்ளது. நமது பாரம்பரியம், கலாசாரத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்த தசரா விழா சிறந்த எடுத்துகாட்டாகும். கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பலருக்கு கன்னடம் தெரியாது. அவ்வாறு தெரியாதவர்கள், விரைவில் கன்னட மொழியை கற்றுகொள்ள வேண்டும். இங்கு வாழ கன்னட மொழி மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாமுண்டி மலையில் தசரா விழா தொடங்கிய சமயத்தில், மைசூரு அரண்மனையிலும் சிறப்பு பூஜை நடந்தது. மன்னர் குடும்பத்தினர் சார்பில் காலை பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டது. மன்னர் யதுவீர் அதிகாலை 5 மணி அளவில் மஞ்சள் தண்ணீரில் குளித்துவிட்டு அரண்மனை சுற்றிலும் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் மகாராணி பிரமோதா தேவி, ராஜகுருவான பரக்கால மடாதிபதி ஆகியோருக்கு பாத பூஜை செய்தார். இதையடுத்து மகாராணி பிரமோதா தேவி தலைமையில் அரண்மனையில் கணபதி பூஜை, நவகிரக பூஜ, சண்டிகா ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னர் மன்னர் குடும்பத்தின் பாரம்பரிய முறைப்படி மன்னர் யதுவீருக்கு கையில் காப்பு கட்டப்பட்டது.

பின்னர் காலை 6.25 மணி அளவில் சுபமுகூர்த்த நேரத்தில் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்துக்கு பூஜை செலுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து காலை 7 மணி முதல் காலை 7.45 மணி வரை சுப லக்கனத்தில் மன்னர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோருக்கு அரண்மனையில் வாணி விலாஸ் அறையில் கங்கணம் கட்டும் நிகழ்வு நடந்தது.

காலை 9.45 மணி அளவில் அரண்மனையில் பட்டத்து யானை, குதிரை, பசு ஆகியவற்றுக்கு யதுவீர் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் காலை 10.45 மணி அளவில் அம்பா விலாஸ் அறையில் கலச பூஜை, சிம்மாசனத்துக்கு பாரம்பரிய பூஜை நடத்தப்பட்டது. பின்னர் மன்னர் யதுவீர் ராஜ உடை அணிந்து பணியாளர்களுடன் கம்பீரமாக தர்பார் அறைக்கு வந்தார். அதன்பிறகு காலை 11.30 அணி அளவில் நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் ஏறி, அதன் மீது நின்று வணக்கம் செலுத்தினார். இதையடுத்து சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார். அரை மணி நேரம் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மன்னர் யதுவீர், அதன்பிறகு கீழே இறங்கி பணியாளர்கள் புடைசூழ தனி அறைக்கு சென்று ராஜ உடையை கழற்றினார். நேற்று முதல் 24-ந்தேதி வரை தினமும் மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்த உள்ளார்.

தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது.

தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது. அதே நேரத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மைசூரு நகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிறுவயது தசரா நினைவுகளை பகிர்ந்த சித்தராமையா

மைசூரு தசரா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டார். மைசூரு மாவட்டத்தை சேர்ந்த அவர், விழா மேடையில் பேசும்போது, தனது சிறுவயது தசரா விழா கொண்டாட்ட நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர் பேசும்போது, எனக்கு 5-6 வயது இருக்கும்போது ைமசூரு தசரா விழாவை காண எனது தந்தையுடன் வந்தேன். அப்போது நான் எனது தந்தையின் தோள் மீது அமர்ந்து தசரா விழாவை கண்டுகளித்தேன். அவர் தசரா விழா பற்றி கூறுவார். நான் அதனை கேட்டு கொண்டே தசரா விழாவை கண்டு ரசித்தேன். அது என் நினைவில் இன்றும் இருக்கிறது. அதன்பிறகு மைசூருவுக்கு வந்து படிக்கும்போது ஒவ்வொரு தசரா விழாவிலும் தவறாமல் கலந்துகொள்வேன். தசரா விழா நமது கலை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது என்றார்.


Next Story