பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீது மத்திய உள்துறைக்கு தகவல் கிடைத்ததால் நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கருத்து
மத்திய உள்துறைக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும். அதனால் தான் அவர்கள் மராட்டியம் மட்டுமின்றி நாடு முழுவதும் சோதனை நடத்தி உள்ளனர்
மும்பை,
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறைக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும் என தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறினார்.
மராட்டியம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நேற்று பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் 106 பேர் கைது செய்யப்பட்டனர். மராட்டியத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் 12 இடங்களில் சோதனை நடத்தி 20 பேரை கைது செய்தனர்.
இந்தநிலையில் இந்த சோதனை தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவரான முன்னாள் உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், " மத்திய உள்துறைக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும். அதனால் தான் அவர்கள் மராட்டியம் மட்டுமின்றி நாடு முழுவதும் சோதனை நடத்தி உள்ளனர்" என்றார்.
இதேபோல நாக்பூர் மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து கூறுகையில், " வாய்ப்பு இருந்தால் நாங்கள் மகாவிகாஸ் கூட்டணியில் சிவசேனா, காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிடுவோம். அல்லது அதிகப்பட்ச இடங்களில் தனித்து போட்டியிடுவோம். வருங்காலத்தில் நாக்பூரில் உள்ள சட்டசபை தொகுதி தேர்தலிலும் போட்டியிட விரும்புகிறோம். விதர்பாவில் தேசியவாத காங்கிரஸ் சிறப்பாக செயல்படும் " என்றார்.