40 சதவீத கமிஷன், உயர்கல்வி முறைகேடு விவகாரம் கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
40 சதவீத கமிஷன், உயர்கல்வி முறைகேடுகள் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டது.
பெங்களூரு:
40 சதவீத கமிஷன், உயர்கல்வி முறைகேடுகள் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து சபை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டது.
முறைகேடுகள்
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது.முதல் நாள் கூட்டத்தில் மந்திரியாக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில், அன்றைய தினம் இரவு, குமாரசாமி பேசும்போது, உயர்கல்வித்துறையின் கீழ் வரும் பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளையை அபகரிக்க உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் முயற்சி செய்துள்ளார் என்றும், மேலும் அந்த அறக்கட்டளைக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறும் அவர் வலியுறுத்தினார்.
தர்ணா போராட்டம்
ஆனால் மாநில அரசு, இதுபற்றி விசாரணை நடத்த முடியாது என்று கூறிவிட்டது. இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) உறுப்பினா்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். அதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது. சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அவர்கள் தர்ணா போராட்டத்தை நடத்தினர். இரவு முழுவதும் அங்கேயே தர்ணா நடத்த அவர்கள் முடிவு செய்தனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்டு கொண்டதை அடுத்து அவர்கள் தர்ணாவை வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் 10-வது மற்றும் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியதும், ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் நேற்று 2-வது நாளாக சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் ராஜினாமா செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் கைகளில் அஸ்வத் நாராயணுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
கூச்சல்-குழப்பம்
இதையடுத்து சபையை சபாநாயகர் 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். சட்டசபை கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தி, சபையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொண்டார். அதைத்தொடர்ந்து சபை மீண்டும் கூடியது.
அப்போதும், ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் தங்களின் கோரிக்கையை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டு கடும் அமளி உண்டானது. இருக்கைக்கு திரும்பும்படி சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது பேசிய குமாரசாமி, "பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. அல்லது சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். இதை அரசு ஏற்றுக்கொண்டால் தா்ணாவை வாபஸ் பெறுகிறோம்" என்றார்.
அதற்கு பதிலளித்த மந்திரி அஸ்வத் நாராயண், "பி.எம்.எஸ், கல்வி அறக்கட்டளையில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே அரசு சார்பில் அறக்கட்டளை உறுப்பினர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதனால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.
40 சதவீத கமிஷன்
அதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள், விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்கிறார்கள். அரசு இதை ஏற்றுக்கொண்டால் அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிடுவார்கள். நான் 40 சதவீத கமிஷன் விவகாரம் குறித்து நோட்டீசு வழங்கினேன். அதுபற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து விவாதிக்க சட்டசபை கூட்டத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க வேண்டும்" என்றார்.
அதற்கு பதிலளித்த சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "நவராத்திரி பண்டிகை வருகிற திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. அதை மனதில் வைத்தே நாங்கள் இன்றுடன் (நேற்று) கூட்டத்தொடரை முடிக்கும் வகையில் தேதி முடிவு செய்தோம். அதனால் கூட்டத்தொடரை நீட்டிக்கும் திட்டம் இல்லை" என்றார்.
பா.ஜனதா தந்திரம்
மீண்டும் பேசிய சித்தராமையா, "அரசு தன் மீதான ஊழல் புகார்கள் குறித்து இங்கு விவாதிக்க கூடாது என்று கருதி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இது பா.ஜனதா அரசு செய்யும் தந்திரம். இத்தகைய தந்திரத்தை செய்ய எங்களுக்கு தெரியாது. 40 சதவீத கமிஷன் குறித்து அவசியம் விவாதிக்கப்பட வேண்டும். இது முக்கியமான விவகாரம்" என்றார்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சபையில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து சபையை சபாநாயகர் காகேரி காலவரையின்றி ஒத்திவைத்தார்.