தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் தொடர்் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யபட்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் தொடர்் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யபட்டார்.
கொலை வழக்கு
மைசூரு டவுன் குட்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சித்தராஜ் என்கிற மூர்த்தி(வயது 52). இவர் கடந்த 2005-ம் ஆண்டு கங்கம்மா என்பவரை கொலை செய்து கபினி ஆற்றில் வீசியது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டு சென்றபோது போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
சித்தராஜை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை. இதையடுத்து சித்தராஜ் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். மங்களூரு டவுனில் நடந்த திருட்டு வழக்கில் போலீசார் சித்தராஜை தேடி வந்தனர். இந்தநிலையில் சித்தராஜை மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 270 கிராம் தங்க நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் மீட்கப்பட்டன.
17 ஆண்டுகளுக்கு பிறது கைது
விசாரணையில் அவர் உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இவர் மீது 12 வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன.
இதுகுறித்து மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார்சிங் ஜெயின் நிருபர்களிடம் கூறுகையில், 'திருட்டு வழக்கில் கைது செய்யபட்டுள்ள சித்தராஜ் மீது கொலை வழக்கு உள்பட 12 வழக்குகள் உள்ளன. இவருடன் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடு பகுதியை சேர்ந்த புனித் என்பவரும் சேர்ந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் புனித் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். கைது செய்யப்பட்ட சித்தராஜ் 17 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது' என்றார்.