பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த பிரபல ரவுடிக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசார்; கை விலங்கிட்டு ஊர்வலமாக அழைத்து சென்றனர்


பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த பிரபல ரவுடிக்கு நூதன தண்டனை கொடுத்த போலீசார்; கை விலங்கிட்டு ஊர்வலமாக அழைத்து சென்றனர்
x
தினத்தந்தி 9 Dec 2022 6:45 PM GMT (Updated: 9 Dec 2022 6:45 PM GMT)

பெங்களூருவில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த ரவுடியை கைது செய்த போலீசார், அவரது கையில் விலங்கிட்டு வீதி, வீதியாக போலீசார் அழைத்து சென்றனர்.

டி.ஜே.ஹள்ளி:

ரவுடி கைது

பெங்களூரு டி.ஜே.ஹள்ளியை சேர்ந்தவர் சுகைல். இவர், ரவுடி ஆவார். சுகைல் மீது கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குறிப்பாக பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி சுகைல் பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருந்தார். அவர் மீது சில வியாபாரிகள் டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், ரவுடி சுகைலை டி.ஜே.ஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் சுகைல் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், வியாபாரிகள், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததால், அவருக்கு தகுந்த பாடம் புகட்டவும், சுகைல் மீது மக்களுக்கு இருக்கும் பயத்தை போக்கவும் நூதன தண்டனை கொடுக்க டி.ஜே.ஹள்ளி போலீசார் முடிவு செய்தார்கள்.

ஊர்வலமாக அழைத்து சென்றனர்

இதையடுத்து, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், சாலைகளில் ரவுடி சுகேலை போலீசார் வீதி, வீதியாக அழைத்து சென்றார்கள். அதாவது ரவுடி சுகைலின் கையில் விலங்கிட்டு, அவர் எந்த பகுதியில் எல்லாம் குற்றங்களில் ஈடுபட்டாரோ, வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்தாரோ, அந்த பகுதிகளில் போலீசார் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரவுடி சுகைல் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், அவர் மீது பொதுமக்களுக்கு இருக்கும் பயத்தை போக்கவும் இந்த நூதன தண்டனை கொடுக்கப்பட்டது' என்றார்.

ரவுடி அழைத்து செல்லப்பட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர். பின்னர் அங்கிருந்து ரவுடி அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் டி.ஜே.ஹள்ளி பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story