அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x

ஹலகூர் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

ஹலகூர்: ஹலகூர் அருகே அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

சிறுத்தை அட்டகாசம்

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே அமைந்துள்ளது பாலேஹொன்னி கிராமம். இந்த கிராமம் முத்தத்தி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் முத்தத்தி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதேபோல் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒரு சிறுத்தை பாலேஹொன்னி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

அந்த சிறுத்தை கிராமத்தில் உள்ள தெருநாய்கள், கோழி, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் அந்த சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

கூண்டில் சிக்கியது

அதன்பேரில் வனத்துறையினர் கிராமத்தையொட்டிய ஒரு தோட்டத்தில் இரும்பு கூண்டை வைத்து அதற்கு இரையாக தெருநாய் ஒன்றையும் கட்டி வைத்தனர். கடந்த 2 நாட்களாக அந்த கூண்டை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டது.

இதையடுத்து வனத்துறையினர் இரும்பு கூண்டுடன் அந்த சிறுத்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர். கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சிக்கிக் கொண்டதால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


Next Story